Tuesday, January 5, 2016

உறவுகளுக்காக ஏங்கும் இலங்கை

"இங்கும் ( இலங்கையில்)  இது (தமிழகத்தை) போல்தான் உறவு பாராட்டி வாழ்ந்தோம். அந்த நாட்கள் வராதா?" என்று ஏக்கத்துடன் பலரும், "எல்லாம் இழந்து விட வில்லை. இன்னும் அந்த உறவின் சுவடுகள் இருக்கின்றன. அவற்றின் மீது மீண்டும் அந்த உறவுகளை கட்டியெழுப்ப வேண்டும்''  என்று இலங்கை ஒலுவில் உள்ள தென்கிழக்கு பல்கலை பேராசிரியர்களும், 'யாதும்' திரையிடலுக்குப் பின்னர்  இலங்கையில் சிதிலமடைந்திருக்கும் தமிழ்-முஸ்லிம் உறவுகளைப் பற்றி பேசிய போது, ஒரு படைப்பாளனாய் பெரிதும் மகிழ்ந்தேன். பிளவு பட்டுக் கிடக்கும் சமூகங்களை ஒன்றிணைப்பதை விட மிகப் பெரிய சன்மானம் ஏது?

கடந்த மாதம் கொழும்பு பல்கலைக்கழகமும் AILS ம்  இணைந்து நடத்திய ' Muslims in Sri  Lankan Social Sciences'    என்ற   ஒரு நாள் ஆய்வரங்கில் கலந்து கொள்வதற்காகவும் அத்தோடு 'யாதும்' திரையிடுவதற்காகவும்  இலங்கை செல்லும் வாய்ப்பு கிடைத்தது. Centre for Development and Research , International Centre for Ethnic Studies(ICES), கொழும்பு பல்கலைக் கழகம், தென் கிழக்கு பல்கலைக் கழகம்,  மட்டக்களப்பில் அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலை என்று பல்வேறு இடங்களில் யாதும் திரையிடப்பட்டது.  
























பாரதி என்ற பேராசிரியை படம் 'emotional' ஆக இருப்பதாக குறிப்பிட்டார். மற்றொரு நிகழ்வில் ஒரு முஸ்லிம் மாணவி தனது நெருங்கிய தோழி ஒரு தமிழ் பெண் என்றும் அந்த நட்பை மேலும் வலுப்படுத்துவதாக 'யாதும்' தன்னை உணரச் செய்தது என்று சக மாணவர்கள் மத்தியில் உணர்ச்சி மேலிடப்  பேசினார். மதங்களைக் கடந்து ஆண்  பெண் என்று எல்லோரிடமும் இது போன்ற உறவு நிலை இங்கே மீண்டும் வர வேண்டும் என்ற ஏக்கம் இருப்பதை உணர முடிந்தது.  தென் கிழக்கு பல்கலைகழக கலந்துரையாடலில் திரௌபதி அம்மன் மடை போன்று சில நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி இன்றும் அது போன்ற மதம் கடந்த முதல் மரியாதைகள் இலங்கையில் வழக்கத்தில் உள்ளன. இனச் சண்டையினால்,  போரினால்  நாம் எல்லாவற்றையும் இழந்து விடவில்லை. இழந்தவற்றையும் முயற்சி செய்தால்  மீட்டு எடுக்க  முடியும்  என்று  பேசியது நம்பிக்கை  அளிப்பதாக இருந்தது.  மட்டகளப்பு சார்ந்த நிகழ்வுகளை மௌனகுரு ஐயா சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்.

மட்டகளப்பில் 'யாதும்' திரையிடலினை அடுத்து நடந்த கலந்துரையாடலின் போது அப்படத்தில் பேசப்படும் 'சியான்' என்ற உறவு முறை குறித்து பார்வையாளர்களில் ஒருவர் ஒரு சுவாராசியமான தகவலைத் தெரிவித்தார்.  மதுரை மாநகரைச் சுற்றி வாழும் பிரான்மலை கள்ளர் சமூகம் தங்கள் தாய்வழிப் பாட்டனை 'சியான்' என்றே அழைக்கின்றனர். அதே போல் தங்களை விட வயதில் மூத்த இஸ்லாமிய பெரியவர்களையும் 'சியான் என்றே அழைக்கின்றனர். இஸ்லாமியர்களும் வயதில் மூத்த பிரான்மலை கள்ளர் சமூக பெரியவர்களையும் 'சியான்' என்றே அழைக்கின்றனர்.  இது தமிழகத்தில் நிலவும் சாதி மதங்களைக் கடந்த வித்தியசமான ஒரு உறவுமுறைகளில் ஒன்றாகும். இலங்கையைப் பொறுத்தவரை இது போன்று உறவு முறையாக இல்லாமல் பிரான்மலைக் கள்ளர்கள் தங்கள் தாய்வழிப் பாட்டனை 'சியான்' என்று அழைப்பது போல் சிங்களவர்களும் தங்கள் தாய்வழிப் பாட்டனை ' சியான்' என்றே அழைக்கின்றனர் என்று அந்த பார்வையாளர் தெரிவித்தார். கேட்க ஆச்சரியமாக இருந்தது. வரலாற்றில்  மதுரைக்கும்  சிங்களவர்களுக்குமான தொடர்பு அனைவரும்  அறிந்ததே. ஆகவே இது குறித்து ஆய்வு அவசியம் என்று உணர்ந்தேன்.

யாதும் ஆவணப்படம் பார்த்த பின்னர் வரும் இது போன்ற விமர்சனங்களே ஒரு கலைஞனுக்கு மிகப் பெரிய வெகுமதி. அந்த வகையில் எனது இலங்கை பயணம் பயனுள்ளதாக அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இலங்கையை விட்டுக் கிளம்பும் போது வேறொன்றும் தெளிவானது. வரலாற்று ரீதியாக இலங்கைக்கும் தென் தமிழகத்திற்கும் இடையே நெருங்கிய கலாச்சார பொருளாதார தொடர்புகள் இருந்திருக்கின்றன. இனக்கலவரம் இலங்கையை மட்டும் பாதிக்கவில்லை. அது பொருளாதார ரீதியாக தென் தமிழகத்தையும் மிகவும் பாதித்துள்ளது. இதிலிருந்து அனைவரும் மீள்வது அவசியம்.

எனது இலங்கை பயணத்தை அர்த்தமுள்ளாக்கிய  ஆகியோருக்கு எனது நன்றிகள்.