நக்கீரன், ஜூலை 1, 2017
இன்றைக்கு கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலாக பேரறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த சமயம். சென்னையை அடுத்து, அச்சிறுப்பாக்கத்திற்கு அருகில் உள்ள பள்ளிப்பேட்டை கிராமத்தில் வசிக்கும் முஸ்லிம்கள், தொழுகைக்காக பள்ளிவாசல் எழுப்புவதற்கு உள்ளூர்வாசிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு. அதற்காக உயிர்பலியாகிறது. தங்கள் உரிமையை விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்று முனைப்புடன், நோன்பு பெருநாளுக்கு முந்தைய இரவில் அங்கே குழுமியிருக்கும் முஸ்லிம்களுக்கு, நள்ளிரவில், அவர்கள் பதட்டத்தை அதிகரிக்கும் வண்ணம் அந்த குக்கிராமத்தை நோக்கி வாகனப் படையெடுப்பு. கலவரத்தை எதிர்கொள்ளத் தயாராக கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் மகனாரான மியாகானின் தலைமையில் கூடியிருந்த அந்த சிறு முஸ்லிம் கூட்டத்தினருக்கு வாகனங்கள் அருகில் வர பெருங்குழப்பம்.
வந்தவையெல்லாம் நீல நிற போலீஸ் வாகனங்கள். அதிலிருந்து இறங்கிய போலீசார், கீற்றுக் கொட்டகை கட்டுவதற்குத் தேவையானவற்றை இறக்கி விட்டு, காலை பெருநாள் தொழுகைக்கு முன்னர் பள்ளிவாசல் எழுப்பப்பட்டிருக்க வேண்டும் என்று தங்களுக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருப்பதாக மியாகானிடம் கூற, கூடியிருந்த அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி. நடந்தது இதுதான். முஸ்லிம்கள் பள்ளிவாசல் கட்டுவதற்கு எதிர்ப்பு, அதுவும் தன் கட்சிக்காரர்களாலேயே என்ற செய்தியை அன்று டெல்லியில் இருந்த காயிதே மில்லத்திடம் இருந்து தெரிந்து கொண்ட முதலமைச்சர் அண்ணா உடனடியாக எடுத்த நடவடிக்கைதான் அது. காவலர் பாதுகாப்புடன் பெருநாள் தொழுகையை மனநிறைவுடன் தொழுது முடித்த முஸ்லிம்களுக்கு இன்னொரு ஆச்சரியமும் காத்திருந்தது.
தொழுது முடித்த மியாகானை சந்திக்க அருகிலுள்ள பயணியர் விடுதியில் முதல்வர் அண்ணா காத்திருக்கிறார் என்ற செய்திதான் அது. விடுதியில் அண்ணாவுடன் காவல் துறை மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமின்றி, இதற்கு முட்டுக்கட்டையாக இருந்த தன் கட்சி அமைச்சர்கள் இருவரும் இருந்தனர். கான்சர் நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையிலும் அண்ணா இஸ்லாமியருக்கு ஏற்பட்ட இக்கட்டை களைய நேரடியாக களத்தில் இறங்கியிருந்தார். சில மாதங்களிலேயே பேரறிஞர் அண்ணா இறந்து போனார். இருப்பினும் இஸ்லாமியர்களுக்கும் திராவிட இயக்கத்திற்குமான நெருக்கமான உறவிற்கான எண்ணற்ற எடுத்துக்காட்டுகளில் இதுவும் ஒன்று.
இருபதாம் நூற்றாண்டில் திராவிட இயக்கம் ஆரம்பித்த நாட்களில் இருந்தே இஸ்லாமியரை அரவணைத்தே அதன் நடவடிக்கைகள் இருந்திருக்கின்றன. பெரியாரின் வரவால் இன்னும் பலப்பட்ட அந்த உறவு இந்தி எதிர்ப்பு போராட்டம், இயக்கம் சார்ந்த நடவடிக்கைகள் என்று வலுப்பெற்றது. பெரியாரின் வழியைப் பின்பற்றி ஆட்சி செய்த அண்ணா, கலைஞர் காலத்திலும் அவை தொடர்ந்தன.
இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் காங்கிரஸ் ஆட்சியில் பல உரிமைகளை தமிழக முஸ்லிம்கள் இழக்க நேரிட்டது, புதிதாக ஒரு காவல்துறை பிரிவினை உருவாக்க முனைந்த சென்னை மாகாண அரசு முஸ்லிம்களை காவலர்களாக தேர்வு செய்வதற்கு எதிராக அரசு ஆணை பிறப்பித்தது. இதற்கு எதிர்ப்பு எழ, 1952 ஆரம்பத்தில் அன்றைய நிதியமைச்சராக இருந்த கோபால் ரெட்டி தடையை விலக்குவதாக சென்னை மாகாண சட்டசபையில் அறிவித்தார். இருப்பினும் சுதந்திரத்திற்கு முந்தைய நீதிக்கட்சி ஆட்சியின் போது பனகல் அரசரால் ஆரம்பிக்கப்பட்ட அரசு யுனானி மருத்துவப் பாடசாலை காங்கிரஸ் அரசால் இழுத்து மூடப்பட்டது. இந்திய மருத்துவ முறையை ஊக்குவிக்கும் எண்ணத்தோடு சென்னை அண்ணா நகரில் சித்த மருத்துவப் பிரிவை கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு தொடங்கியபோது, காங்கிரஸ் அரசால் இழுத்து மூடப்பட்ட யுனானி மருத்துவத்திற்கும் படிப்புக்கும் இடம் வழங்கப்பட்டது.
அதேபோல் சுதந்திரத்திற்கு முன்னர் இஸ்லாமியரின் உயர்கல்விக்காக சென்னை அண்ணா சாலையில் ஸ்பென்சர் அருகில் ஆரம்பிக்கப்பட்ட அரசு முகம்மதிய கலைக் கல்லூரியையும் வெவ்வேறு காரணங்களைக் காட்டி அன்றைய காங்கிரஸ் அரசு பொது பெண்கள் கல்லூரியாக மாற்றியது. எந்தக் கல்லூரி முஸ்லிம்களிடமிருந்து காங்கிரஸ் ஆட்சியில் பறிக்கப்பட்டதோ, அந்த தவறுக்கு பிராயச்சித்தமாக தி.மு.க. ஆட்சியில் அக்கல்லூரிக்கு கண்ணியத்திற்குரிய 'காயிதேமில்லத் பெண்கள் அரசு கலைக் கல்லூரி' என்ற பெயரை சூட்டியதோடு மட்டுமில்லாமல், இஸ்லாமியர் இழந்துவிட்ட கல்லூரிக்குப் பதிலாக சென்னை மேடவாக்கத்தில் 40 ஏக்கர் நிலம் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு ஒதுக்கியது. இதே போல் இட ஒதுக்கீடு, நபிகள் நாயகம் பிறந்தநாள் விழாவுக்கு விடுமுறை என்று முஸ்லிம்களுக்கு அனுசரணையாக தி.மு.க. ஆட்சியில் எண்ணற்ற உதாரணங்களைக் கூறலாம்.
கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத், தந்தை பெரியார் ஆகியோரின் மறைவு, தி.மு.க. விலிருந்து ஙஏத விலகல் ஆகியவை இந்த உறவில் பெரிதும் மாற்றம் கொண்டுவரவில்லை எனலாம். காயிதேமில்லத்தின் மறைவுக்குப் பின்னர், எமெர்ஜென்சியை அடுத்து 1977-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஙஏத தலைமையிலான அ.தி.மு.க. பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்தாலும், அந்த கூட்டணியில் இடம்பெற்ற அப்துல்சமத்தின் தலைமையிலான முஸ்லிம் லீக் போட்டியிட்ட 10 இடங்களில் ஒன்றில் மட்டுமே ஜெயிக்க முடிந்தது.
இதைவைத்து முஸ்லிம்கள் அ.தி.மு.க.வை ஒதுக்கிவிட்டார்கள் என்று முடிவுக்கு வந்து விடக்கூடாது. மாறாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட முஸ்லிம்கள் பலர் சட்டமன்றத்தில் நுழைந்தனர். காலப்போக்கில் இஸ்லாமிய கட்சிகள் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு தங்கள் பலத்தை நிரூபிக்க முற்பட்டபோது அத்தொகுதி முஸ்லிம் வாக்காளர்களின் வாக்குகளில் பத்து சதவிகித வாக்குகளைக்கூட பெறமுடியாத அளவுக்கு பொதுக்கட்சிகளில் குறிப்பாக திராவிட இயக்கத்தில் முஸ்லிம்கள் ஐக்கியமாகிவிட்டிருந்தனர்.
எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.இ.அ.தி.மு.க.வின் ஆட்சியின்போது சிறு சலசலப்புகள் இல்லாமல் இல்லை. ஜெயலலிதாவின் தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் திராவிட அரசியல் அயோத்திக்கு செங்கல் அனுப்பும் அளவுக்கு "பரிணாம வளர்ச்சி'யை நோக்கி பயணிக்க, இந்து மற்றும் இஸ்லாமிய மதவாத சக்திகள் தமிழகத்தில் வளர ஏதுவானது. காங்கிரசால் தொடர்ந்து தவிர்க்கப்பட்ட நிலையில், 1999 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் தி.மு.க. கூட்டணி உறவுகொண்டது.
இது முஸ்லிம்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருமுறை இந்திய அரசாணை சட்டம் 356 பிரிவில் ஆட்சியை இழந்த தி.மு,க,விற்கு மத்தியில் நட்புக்கரம் தேவையாயிருந்தது. இருப்பினும் அது ஒரு இக்கட்டான உறவு, கொள்கைக்கு முரணான உறவு. முஸ்லிம்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தினாலும் அந்தக் கூட்டணியால் பெரிதும் நொந்தது உள்ளூர் இந்துத்துவவாதிகள்தான். தி.மு.க.விற்கு எதிரணியில் இருந்தபோது தமிழகத்தில் அமைப்பாக செயல்பட இருந்த சுதந்திரம் கூட கூட்டணியால் பறிபோனதாக மூத்த இந்து அமைப்பினர் அங்கலாய்க்கும் அளவிற்கு தி.மு.க. அரசு இந்துத்துவ அமைப்புகளை கட்டுக்குள் வைத்திருந்தது. 2011-ல் ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றபோது, பரிணாம வளர்ச்சி அரசியலில் இருந்து விலகி பெரும்பாலும் திராவிடமயமாக்கப்பட்ட அ.இ.அ.தி.மு.க. ஆட்சியாக, சிறுபான்மையினர் அனைவரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய ஆட்சியாகவே அது செயல்பட்டது.
இன்று தமிழகத்தைவிட மிக அதிக அளவில் இஸ்லாமியர் வாழும் வட மாநிலங்களில் அரசியல், பொதுவாழ்வு என்று அனைத்திலும் புறந்தள்ளப்பட்டிருக்கும் இஸ்லாமிய சமூகத்தோடு ஒப்பிடுகையில் ஐம்பது ஆண்டு திராவிட ஆட்சி என்பது தமிழர்கள் அனைவரையும் சாதி, மத வேறுபாடின்றி அரவணைத்துச் செல்லும், குறிப்பாக இஸ்லாமியரை பொறுத்தவரை அவர்கள் பிரதிநித்துவம் பெற்ற ஆட்சியாகவே அமைந்துள்ளது எனலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment